53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து வெளியேவந்தார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அக்டோபர் 18 அன்று நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் அவரை ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.
சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி, ஆந்திர உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இதனால் நவம்பர் 24ம் தேதி சந்திரபாபு நாயுடு மீண்டும் சரணடைய உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10ம் தேதி முக்கிய ஜாமீன் மனு மீதான வாதங்களை நீதிமன்றம் விசாரிக்கும். மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊடகங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தற்போது 53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, வெளியே வந்தார். தனக்கு அதரவு அளித்த அனைவருக்கும் சந்திரபாபு நாயுடு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.