ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற இஸ்ரேல் இராணுவத்தின் பெண் வீரரை, அந்நாட்டு இராணுவ வீரர்கள் மீட்டிருக்கிறார்கள்.
காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மேலும், வெளிநாட்டினர் மற்றும் இஸ்ரேலியர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினர் சிலரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 25-வது நாளாகத் தொடரும் இத்தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி இருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் ஆகியவற்றையும் இஸ்ரேல் தரைமட்டமாக்கி இருக்கிறது. முதலில் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டு வந்த இஸ்ரேல் தற்போது தரை வழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறது.
இஸ்ரேலின் டாங்கிகள் காஸா நகரின் மையப்பகுதி வரை சென்று தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காலாட் படை வீரர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில்தான் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதியாகப் பிடித்துச் சென்ற ஓரி மெகதீஷ் என்கிற இஸ்ரேல் நாட்டின் பெண் இராணுவ வீரரை, இஸ்ரேல் இராணுவம் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதோடு, அந்த பெண் வீரர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது. மேலும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.