மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, ‘டிஜிட்டல்’ முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த மாதம் முழுதும், தீவிர பிரசார இயக்கங்கள் நடத்த, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒருமுறை, உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் ஆயுள் சான்றிதழ் வழங்க வேண்டும். கடந்த, 2014-ஆம் ஆண்டு, இது டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்குவதை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. இதன்படி ஓய்வூதியதாரர்கள், தங்களுடைய கைவிரல்கள் பதிவு, கண்விழி பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் ஆதார் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், கடந்த 2021-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, ஓய்வூதியதாரர்கள், தங்களுடைய மொபைல்போனில் இருந்து, முகத்தைப் பதிவு செய்து, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைப் பெற முடியும்.
இந்த முறையை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரசாரம், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. அப்போது, 37 நகரங்களில் நடந்த இந்த பிரசார இயக்கத்தின் வாயிலாக, 35 இலட்சம் பேருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதன் இரண்டாவது கட்ட பிரசார இயக்கத்தை, இந்த மாதம் முழுதும் நடத்த மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுதும், 100 நகரங்களில், 500 இடங்களில் பிரசார இயக்கம் நடக்க உள்ளது. இதில், 50 இலட்சம் பேருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதார் ஆணையம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ‘ஓய்வூதியம்’ விநியோகிக்கும், 17 வங்கிகள் மற்றும் அனைத்து அமைச்சகங்கள், துறைகளுடன் இணைந்து இந்த இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதற்காக பிரசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.