வரும் 23-ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் பங்கிடுவதில் தமிழகம் – கர்நாடகா இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் முக்கிய நீராதாரமாகக் காவிரி நதி உள்ளது. இந்த நதியை நம்பியே விவசாயம் மற்றும் குடிநீர் தேவை உள்ளிட்டவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு 87-வது கூட்டத்தில், தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காகக் கர்நாடக அரசு அடுத்து வரும் 15 நாட்களுக்குக் காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.
செப்டம்பர் 28 -ம் தேதி முதல் அக்டோபர் 15 -ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. முன்னதாக, காவிரியிலிருந்து 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது. இதில்,
தமிழகத்துக்கு வரும் 23 -ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் கர்நாடக அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.