7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி லக்னோவில் ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானதில் நடைபெற்றது.
நேற்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி பாரேசி மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர்.
இதில் வெஸ்லி பாரேசி முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக நெதர்லாந்து அணியின் வீரர் கொலின் அக்கர்மன் களமிறங்கினார்.
மேக்ஸ் ஓ’டவுட் மற்றும் கொலின் அக்கர்மன் சிறப்பாக தங்களது திறமைகளை காண்பித்து வந்தனர். இதில் மேக்ஸ் ஓ’டவுட் 9 பௌண்டரீஸ் அடித்து 11 வது ஓவரில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் களமிறங்கினார். கொலின் மற்றும் சைப்ரண்ட் கூட்டணியும் சிறப்பாக விளையாடி பௌண்டரிசாக அடித்து வந்தது. அப்போது 19 வது ஓவரில் கொலின் 4 பௌண்டரிஸுடன் 29 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அடுத்ததாக சிறப்பாக விளையாடி வந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அடுத்த பந்திலேயே ரன் அவுட் ஆனார். சைப்ரண்ட் 6 பௌண்டரிஸுடன் 86 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட் தான் இறங்கிய முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகி சென்றார்.
பின்பு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நெதர்லாந்து வீரர்களை பொறுத்தவரை 4 பேர் ரன் அவுட் ஆனது அந்த அணிக்கு வேதனையை அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது நம்பி 3 விக்கெட்களும், நூர் அஹ்மத் 2 விக்கெட்களும், முஜீப் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இதனால் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.
இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 5 வது ஓவரில் 11 பந்துகளில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு 10 வது ஓவரில் இப்ராஹிம் 34 பந்துகளில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய ரஹ்மத் ஷா 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 54 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 56 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 31 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் 31 வது ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்கள் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபி அவர்களுக்கு அளிக்கப்பட்டது.