நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மலை இரயில் சேவை மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த மலை இரயிலில் பயணம் செய்து அங்குள்ள, இயற்கை சூழலை இரசிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக, கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், நீலகிரி மலை இரயில் சேவை இரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.