இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் நெருக்கடி குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவாதித்திருக்கிறார்.
இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில், 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. இப்போரின்போது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கிய இலக்குகளை அழித்திருக்கிறது.
மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட 9,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதோடு, காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. 28-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மத்திய கிழக்கு நாடுகள் எதிர்கொண்டிருக்கின்றன.
இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உலகத் தலைவர்களை தொடர்புகொண்டு இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக மேற்கு ஆசியாவில் நிலவி வரும் துயரமான சூழல் குறித்து விவாதித்து வருகிறார். அந்த வகையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் நெருக்கடி குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களைக் கண்டித்த தலைவர்கள், ஹமாஸ் பாலஸ்தீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், பரந்த பிராந்தியத்தில் பதட்டங்களைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதிபலிப்பதாகவும் வலியுறுத்தினர். மேலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக பாரதப் பிரதமர் மோடி ஏற்கெனவே ஜோர்டான் மன்னர் மற்றும் எகிப்து அதிபருடன் தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது.