கர்நாடகா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் அரசு ஊழலில் திளைப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானாவுக்காக உயிர் இழந்த இளைஞர்களின் ரத்தத்தில் காங்கிரஸின் கைகள் படிந்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா சட்டப்பேரவையின் 119 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சத்தீஸ்கரில் ஊழல் மோசடி அம்பலமானதாகவும், ஆட்சிக்கு வர, மகாதேவ் பெட்டிங் ஆப் மூலம் வெளிநாட்டுப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இது காங்கிரஸ் அரசு ஊழலில் மூழ்கி இருப்பதைக் காட்டுவதாகவும், அவர் கூறினார்.
ராஜஸ்தானில், தலைமைச் செயலகத்தில் ரூ.2 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் தலைவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். காங்கிரஸ் வெளி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முயல்வதாகவும் அவர் கூறினார்.
தெலுங்கானா உருவான போது, காங்கிரஸ் செய்த நாடகத்தை பார்த்ததாகவும். தெலுங்கானாவுக்காக உயிர் இழந்த இளைஞர்களின் ரத்தத்தில் காங்கிரஸின் கைகள் படிந்துள்ளதாகவும் அவர் கூறினார். சந்திரசேகரராவ் கட்சியின் பெயரை மாற்றலாம், ஆனால் அவரின் ஊழல் முகத்தை மறைக்க முடியாது என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.