நாட்டிலுள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மோடியின் உத்தரவாதம் என்றால் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று அர்த்தம் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இம்மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், இம்மாநிலத்தில் வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், ஆளும் பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “தற்போதைய விவாதம் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதல்ல. பா.ஜ.க. மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையைப் பெறுமா அல்லது குறைவாகப் பெறுமா என்பதுதான்.
ஒட்டுமொத்த நாடாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேச மாநிலமாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சிக்கு பொய்யான வாக்குறுதிகள் மட்டுமே மிச்சம். காங்கிரஸ் கட்சியிடம் மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கான சாலை வரைபடம் கூடத் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சினிமா எடுக்கிறார்கள். அதனால், அவர்களது டயலாக்குகளும் சினிமாத்தனமாகவே இருக்கிறது. கதாபாத்திரங்கள் சினிமாவில் வருவதுபோல இருந்தால் காட்சியும் சினிமா மாதிரிதானே இருக்கும். டிசம்பர் 3-ம் தேதி பா.ஜ.க.வின் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸின் உண்மையான சினிமா தெரியும்.
நாட்டிலுள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். உங்களின் பாசமும், ஆசிர்வாதமும்தான் இதுபோன்ற முடிவுகளை எடுக்க எனக்கு சக்தியைத் தருகிறது. மோடியின் உத்தரவாதம் என்றால் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று அர்த்தம். இத்திட்டத்தை நீட்டிப்பதன் மூலம் ஏழைகள் சேமிக்கும் பணம் மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்” என்றார்.