மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, மிசோராம் மாநிலத்தில் வரும் 7-ம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் 17-ம் தேதியும், ராஜஸ்தானில் 25-ம் தேதியும், தெலங்கானாவில் 30-ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. அதேசமயம், சத்தீஸ்கரில் 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடக்கிறது.
மேற்கண்ட 5 மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைத் தவிர குறிப்பிடத்தக்கத் தலைவர்கள் இல்லை.
அதேசமயம், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் என முக்கியப் பிரச்சாரகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் வாக்குசேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மிசோராம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை மறுநாள் (7-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுவதால், இவ்விரு மாநிலங்களிலும் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.