இளம் விமானிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரி தெரிவித்திருக்கிறார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையின் போர் விமான பயிற்சிப் பள்ளியின் 75-வது பிளாட்டினம் ஜூப்ளி விழா நடைபெற்றது. விழாவில், இப்பள்ளியில் பயின்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் உயரதிகாரிகள், மூத்த விமானிகள், முன்னாள் வீரர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சர்வதேச அளவில் விமானிகள், விமான பயிற்றுனர்களுக்கான பயிற்சிகள் குறித்த கருத்தரங்குகளும் நடந்தன. விமானப்படை சாகச நிகழ்ச்சியில், பல்வேறு ரக விமானங்கள் தாழ்வாக பறந்தும், வானத்தில் பல்டி அடித்தும் சாகசம் செய்தன.
குறிப்பாக, விமானப் படையின் ‘ஆகாச கங்கா’ குழுவைச் சேர்ந்த 9 வீரர்கள் ஹெலிகாப்டரில் 9,000 அடி உயரத்தில் இருந்து ‘ப்ரீ டைவிங்’ செய்து, ‘பாராசூட்’ உதவியுடன் தரை இறங்கி இலக்கை வந்தடைந்தனர். மேலும், 3 வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேசியக்கொடி போன்று ‘ஸ்கை டைவிங்’ செய்தனர். அதேபோல, 2 வீரர்கள் விமானப் படையின் கொடியை ஏந்தியவாறு ஒன்றாக கைகளை இணைத்து குதித்தனர்.
இவ்விழாவில், விமானப்படைத் தளபதி வி.ஆா்.சௌத்ரி, பயிற்றுநா் பள்ளியின் பாரம்பரிய மண்டபத்தைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தொடர்ந்து, தளபதி வீ.ஆர்.சவுத்ரி பேசுகையில், “விமானப் படையில் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். நான் விமானப் பயிற்சி பெற்ற காலத்தில், தொழில்நுட்பங்கள் பழமையாக இருந்தது.
அதைப் போல் இல்லாமல், தற்போது 20 வயதுக்குள் விமானப் படையில் சேரும் வீரர்கள், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியில் விமானம் ஓட்டுவது எப்படி, தரையிறக்குவது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தாங்களாவே கற்றுக் கொள்கின்றனர். வரும் காலத்தில், விமானிகளுக்குத் தேவையான சிறப்பான பயிற்சிகளை வழங்க ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்” என்றார்.
விழாவில், நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களை கௌரவிக்கும் வகையில், மறைந்த போா் விமானி என்.ஜெ.எஸ்.செகூனின் உருவச்சிலை அமைந்த ‘ஸ்மிருதி ஸ்தலம்’ என்று அழைக்கப்படும் போா் நினைவிடத்தை, 1999-ம் ஆண்டில் ‘சபேத் சாகா்’ விமானத் தாக்குதலின்போது மறைந்த ஸ்குவாட்ரன் தலைவரும், பயிற்றுநா் பள்ளியின் முன்னாள் மாணவருமான அஜய் அஹுஜாவின் மனைவி அல்கா அஹுஜா திறந்து வைத்தாா்.