நவம்பர் 19-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப் போருக்கு ஆபத்து ஏற்படும் என்று காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டிருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், அன்றுதான் இந்தியாவில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்கிற தடை செய்யப்பட்ட அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னூன். காலிஸ்தான் தீவிரவாதியான இவர், புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில். “நவம்பர் 19-ம் தேதிக்குப் பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம்.
நவம்பர் 19-ம் தேதியன்று ஏர் இந்தியா விமானங்களை இயக்க அனுமதிக்க முடியாது. மேலும், நவம்பர் 19-ம் தேதி முதல் உலகளாவிய முற்றுகை இருக்கும். ஆகவே, ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அப்படி பயணித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் ஷாஹித் பியாந்த் சிங் விமான நிலையம் என மாற்றப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், நவம்பர் 19-ம் தேதிதான் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
காலிஸ்தான் தீவிரவாதி பன்னூன் மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்திப் சிங் நிஜர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து, இந்திய இந்துக்கள் அனைவரும் கனடாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் பன்னூன் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.