வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை என்றும், ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த போதிலும், பழங்குடியின சமூகத்தின் நலனுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்றார்.
அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நாட்டிலேயே முதல்முறையாக பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கோவிட் ஊரடங்கின் போது ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உணவை வழங்குவார்கள் என்பது தம்மை கவலையடையச் செய்ததாகவும், எந்த சூழ்நிலையிலும் நாட்டு மக்களை காப்பாற்ற போராட முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் விளைவாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜ்னா மூலம் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்க முடிவு செய்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.
“நான் வறுமையிலிருந்து வந்தவன். வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை. ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் ஆட்சியில், பல லட்சம் கோடி ஊழல்கள் நடந்தன, ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை, இதனால் சேமிக்கப்படும் பணம் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்காக செலவிடப்படுகிறது என்று அவர் கூறினார்.
நாட்டில் மொபைல் போன்கள் பெருமளவில் கிடைப்பதைக் குறிப்பிட்ட மோடி, தனது அரசாங்கத்தின் கொள்கைகளாலும், மக்களுக்கு பெரும் சேமிப்பை உறுதி செய்வதாலும் நாட்டில் மொபைல் போன்கள் மற்றும் டேட்டா சேவைகள் மலிவாக கிடைப்பதாக கூறினார்.
தற்பேது மொபைல் போன் மற்றும் டேட்டாவுக்கு மாதந்தோறும் ரூ.300-400 கட்டணம் செலவு ஆவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ரூ.4,000-5,000 ஆக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியை மகன்களுக்காக கைப்பற்றுவதில் அக்கட்சியை சேர்ந்த இரு மூத்த தலைவர்கள் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.
மேலும், அரசு நிறுவிய ஜனஉஷதி கேந்திராக்கள் மருந்துகளுக்கு 80 சதவீதம் தள்ளுபடி அளித்து நாட்டில் உள்ள ஏழை மக்களின் 25,000 கோடி ரூபாயை காப்பாற்றியதாகவும் மோடி கூறினார்.