ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது 5-வது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில் 15 வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக வெளியிட்டு விட்டது. அதேசமயம், பா.ஜ.க. பல்வேறு கட்டங்களாக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க. தரப்பில் இதுவரை 4 முறை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது 5-வது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில் மொத்தம் 15 வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இப்பட்டியலின்படி, அன்ஷுமான் சிங் பாடி கோலாயத்திலும், கோபால் சர்மா சிவில் லைன்ஸிலும், பிரஹலாத் குஞ்சல் கோட்டா வடக்கிலும் களமிறங்குகிறார்கள். ராஜகேராவில் நீரஜா அசோக் ஷர்மா, மசூதாவில் அபிஷேக் சிங், ஷெர்கார்வில் பாபு சிங் ரத்தோர், மவ்லியில் கே.ஜி.பாலிவால், பிபால்டாவில் பிரேம்சந்த் கோச்சார், பாரண் அட்ருவில் ராதிஷ்யம் பைர்வா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஹனுமங்கரில் அமித் சவுத்ரி, சர்தர்ஷாஹரில் ராஜ்குமார் ரின்வா, ஷாபுராவில் உபென் யாதவ், கிஷன் போலில் சந்திரமோகன் பட்வாடா, ஆதர்ஷ் நகரில் ரவி நய்யார் மற்றும் பரத்பூரில் விஜய் பன்சால் ஆகியோரையும் வேட்பாளர்களாக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. 2-வது வேட்பாளர் பட்டியலில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.