போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். அரை மணி நேரத்திற்குள்ளாக 7,000 ஏவுகணைகளை செலுத்தியதால் இஸ்ரேல் திணறிப்போனது. மேலும், இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், அந்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, இஸ்ரேல் கடந்த 29 நாட்களாக பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை வழியாக ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைத்து குண்டுகளை வீசி வருவதோடு, கப்பல்படை மூலமும் ஏவுகணைகளை செலுத்தி வருகிறது. மேலும், பீரங்கிகள், டாங்கிகள் மூலம் காலாட் படையின் தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அதேசமயம், அப்பாவி மக்கள் 10,000-க்கும் மேற்பட்டோரும் பலியாகி இருப்பதுதான் சோகம். மேலும், 25,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தின் விமானப்படை நடத்திய தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, மின்சார வசதி இல்லை, மருத்துவம் பார்க்க மருந்துகள் இல்லை என்று காஸா நகரமே முடங்கிப் போய்க் கிடக்கிறது.
எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். இதனால், போர் நீண்ட காலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக் கொண்டு இஸ்ரேல் இராணுவத்தினரை தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்த நிலையில்தான், போர் தொடங்கியது முதல் தற்போது வரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்திருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருக்கிறோம். இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகள், தீவிரவாத முகாம்கள் ஆகியவையும் அடக்கம்” என்று தெரிவித்திருக்கிறது.