காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொள்ளையடிப்பதும் தொடரும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடையவிருக்கும் நிலையில், நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, முதல்கட்டமாக மாநிலத்திலுள்ள 20 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையடுத்து, தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. அந்த வகையில், இறுதி நாளான இன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா சத்தீஸ்கர் மாநிலம் கௌரேலா-பென்ட்ரா-மார்வாஹி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, “பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசை மீண்டும் கொண்டு வந்தால், மீண்டும் கொள்ளையடிக்கப்படுவது உறுதி.
மதுபான ஊழல், அரிசி ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுச் சாண ஊழல் மற்றும் பொதுப்பணித்துறை சம்பந்தப்பட்ட ஊழல் போன்றவற்றின் மூலம் பாகல் மாநிலத்துக்குப் போதுமான சேதாரம் செய்யவில்லையா? பாகேல் மீண்டும் முதலமைச்சராக வந்தால், இதுபோன்ற ஊழல்கள் நிச்சயம் மீண்டும் நடக்கும்.
மோசடிகளின் பட்டியலில் இருந்து மகாதேவைக்கூட (சிவபெருமான்) பாகல் விட்டுவைக்கவில்லை. இம்மாநிலத் தேர்தல் செலவுக்காக பூபேஷ் பாகலுக்கு 508 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக அசிம் தாஸ் (மகாதேவ் பெட்டிங் ஆப் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்) தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஊழலில் திளைத்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், சுரங்க ஊழல் என ஊழல் கறைபடிந்த ஆட்சியை நடத்தியது. மாறாக, எங்களது அரசு ஏழைகளுக்காக பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்கிறது. எங்கள் அரசாங்கத்தின் கீழ், பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களுக்கு, 5 மடங்கு பட்ஜெட் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏகலைவ்யா பள்ளிகளுக்கு 22 மடங்கு பட்ஜெட் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆதிவாசிகளுக்கான கல்வி உதவித்தொகை 2.5 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் 13.5 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்ந்திருக்கிறார்கள்.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் ஆன் யோஜனா திட்டத்தின் கீழ், 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ பருப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் யாரும் பட்டினியாகத் தூங்க மாட்டார்கள். இத்திட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை 2 கோடியாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது 13.5 கோடி மக்களை வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்த உதவும்” என்றார்.