காஸா நகரிலுள்ள அல் மகாசி அகதிகள் முகாமில் நேற்று பின்னிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 52 பேர் உயிரிழந்ததாக, அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் தகவல் தொடர்பு இயக்குனர் முகமது அல் ஹாஜ் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் உள்ளிட்ட 2,500-க்கும் மேற்பட்ட இலக்குகள் விமானப்படை மூலம் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலையில், அல் மகாசி அகதிகள் முகாமில் நேற்று பின்னிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 52 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் தகவல் தொடர்பு இயக்குனர் முகமது அல் ஹாஜ் கூறுகையில், “நேற்று பின்னிரவு நேரத்தில் அல் மகாசி அகதிகள் முகாமில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், 52 பேர் பலியாகி இருக்கிறார்கள். இத்தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியது” என்று தெரிவித்திருக்கிறார்.