காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்த நிலையில், அக்கருத்துடன் தான் உடன்படுவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டம் ஜதாரா தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி. கூட்டணிக் கட்சியான எங்களுக்கே துரோகம் இழைத்து விட்டது. அப்படி இருக்க பொதுமக்களாகிய நீங்கள் எப்படி முக்கியமானவர்களாக இருக்க முடியும். ஆகவே, அக்கட்சியிடம் எச்சரிக்கையாக இருங்கள். அக்கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “பொதுவாக அகிலேஷ் யாதவ் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நேற்று அவர் ஒரு நல்ல விளக்கத்தை அளித்து, காங்கிரஸ் ஒரு மோசடி கட்சி என்று கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்தில் நான் உடன்படுகிறேன். காங்கிரஸ் கட்சி செய்த மோசடிகள் குறித்த சில உண்மைகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்…
கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்தது. அதாவது, அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 10 கிலோ அரிசி இலவசம். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்தோறும் 3,000 உதவித்தொகை.
டிப்ளமோ படித்தவர்களுக்கு (18-25 வயதுக்குட்பட்டவர்கள்) 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை. மேலும், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அப்படியே பல்டி அடித்து விட்டது. பட்டப்படிப்பு முடித்து முந்தைய ஆண்டு வேலையில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என்றார்கள். ஆகவே, காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று அகிலேஷ் சொன்னதில் தவறேதும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.