இஸ்ரேலுக்கு ஆதரவாக மேற்கு ஆசியாவின் கடல் பகுதியில் 2 விமானம் தாக்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி இருக்கும் அமெரிக்கா, தற்போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அனுப்பி வைத்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் தீடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 1,400 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாத அளவுக்கு இஸ்ரேல் பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் மற்றும் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள் என 2,500 இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.
எனினும், போர் முடிவுக்கு வந்த பாடில்லை. இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, பல்வேறு நாடுகளும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இதனால், 30-வது நாளாக போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
அதேசமயம், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வருதோடு, 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களையும் மேற்கு ஆசியா கடல் பகுதியில் நிலைநிறுத்தி இருக்கிறது. இந்த சூழலில், தற்போது அணுசக்திக் கப்பலையும் மேற்கு ஆசியாவின் கடல் பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இக்கப்பல் கெய்ரோ நகருக்கு வடகிழக்கே அல் சலாம் பாலத்தின் கீழ் சூயஸ் கால்வாயை வந்தடைந்திருக்கிறது.
அப்பகுதியில் ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் 2 விமானம்தாங்கி கப்பல்களுடன், இந்தக் கப்பலும் இணைந்திருக்கிறது. இதேபோல, அமெரிக்க கப்பல்படையில் 4 கப்பல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அதிக திறன் வாய்ந்த 154 தோமஹாக் ரக ஏவுகணைகளை ஏந்தி செல்லக் கூடியது. ஒவ்வொரு தோமஹாக்கும் 1,000 பவுண்டு எடை கொண்ட அதிக வெடிக்கக் கூடிய திறன் பெற்ற ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரிவடைந்து விடக்கூடாது என்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், மேற்கு ஆசிய நாடுகளான துருக்கி, ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், மேற்கு கரை மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.