கேரள குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டொமினிக் மார்ட்டினை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள கிறிஸ்துவ வழிபாட்டு தளத்தில் கடந்த 29ஆம் தேதி பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர்.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த களமச்சேரியை சேர்ந்த மோலி ஜாய் என்ற மூதாட்டி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரணடைந்தார். டொமினிக் மார்ட்டினை விசாரிக்க அனுமதி கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டொமினிக் மார்ட்டினை 10 நாள்கள் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.