காஸா நகரில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் புறக்காவல் நிலையத்தைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், முக்கியத் தீவிரவாதத் தலைவர் ஒருவரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், 3,500 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் காஸா நகரைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதோடு, 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.
பலியானவர்களில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முக்கியப் படைகளின் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் அடக்கம். அதேபோல, இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் உட்பட 2,500 நிலைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் 450 இலக்குகளை அழித்திருப்பதாகக் கூறியிருக்கும் இஸ்ரேல் இராணுவம், காஸாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் புறக்காவல் நிலையத்தையும் இஸ்ரேல் தரைப்படையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இந்த புறக்காவல் நிலையத்தில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கண்காணிப்பு நிலையங்கள், தீவிரவாத செயல்பாட்டாளர்களுக்கான பயிற்சி வளாகங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
மேலும், இந்த அதிரடி நடவடிக்கையின்போது, ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஜமாஸ் மூசா உட்பட ஹமாஸ் தீவிரவாதிகளின் பல தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. கொல்லப்பட்ட ஜமால் மூசா, தீவிரவாத அமைப்பில் சிறப்புப் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்தவர். அதோடு, 1993-ம் ஆண்டு காஸா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.