திமுகவின் அதிகார அத்துமீறல்களை கண்டித்த உச்சநீதிமன்றம், மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், நியாயத்திற்கான பாஜகவின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதனை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது, நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்துள்ளது.
திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான ஊழல் வழக்கு விசாரணையில், தமிழக பாஜக சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தர்மத்தை நிலைநாட்டி, திமுகவின் அராஜத்தைக் கண்டித்து உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
நீதிக்காகவும் நேர்மைக்காகவும் பாடுபடும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றவர்கள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரச்சூட் பெருமிதமும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
1996 2001 ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது 2002 ஆம் ஆண்டு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் நீதிமன்றம் விசாரணை செய்து வந்த இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஜூன் 6, 2023 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விரைவாக விசாரிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமான தகவல்கள் ஜூன் 23, 2023 அன்று சமர்ப்பிக்கப்பட்டன.
அடுத்த நான்கு நாட்களுக்குள், வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி, 172 அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் 381 ஆவணங்களின் சாட்சியங்களை அட்டவணைப்படுத்தி, ஜூன் 28, 2023 அன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து 226 பக்க தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பை வழங்கிய சில நாட்களிலேயே, முதன்மை மாவட்ட நீதிபதி ஜூன் 30, 2023 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பல சந்தேகங்களை எழுப்பிய இந்த வழக்கில் சரியான நீதி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி திரு ஆனந்த வெங்கடேஷ் சுமோட்டவாக இந்த வழக்கை தாமாக முன் வந்து மறுவிசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இந்த வழக்கில் விசாரணையை அவசரமாக வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியதில் தவறு நடந்துள்ளதாகவும் இந்த வழக்கில் நான்கு நாட்களில் 226 பக்கம் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது என்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டதை உச்சநீதிமன்றம் வரவேற்றுள்ளது. அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்த எதிர்ப்பு மனுவை தள்ளுபடி செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றவர்கள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சந்திரச்சூட் பெருமிதமும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதேபோல மற்றொரு வழக்கிலும் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பிலும் அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் நிகழ்ச்சிகளில் பேசும்போது எந்தவித பாகுபாடும் வேறுபாடும் இல்லாமல் சாதி மதம் கொள்கைரீதியாக பிளவு ஏற்படுத்தாமல் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும். எந்த சித்தாந்தத்தையும் யாராலும் ஒழிக்க முடியாது.
இப்படிக் கொள்கையை ஒழிக்க வேண்டும் என்று பேசுவதற்கு பதிலாக, சமுதாயத்தின் தீய பழக்கங்களாக உள்ள போதை மது போன்றவற்றை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும். சமுதாயத்தை சீரழிக்கும் ஊழல் தீண்டாமை கொடுமை உள்ளிட்ட சமூக தீமைகளை அழிப்பதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் எப்போதும் அனுமதிக்காது.
சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமலும், வழக்குப் பதிவு செய்யாமலும் இருந்த தமிழகப்போலீசார் தவறு இழைத்திருக்கிறார்கள். சனாதன ஒழிப்பு பற்றி பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அமைச்சர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது அவர்கள் கடமையிலிருந்து தவறியது ஆகும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
ஒரே நேரத்தில் வெளிவந்திருக்கும் இந்த இரண்டு தீர்ப்புகளும் தமிழகத்தில் எப்படி சட்டம்ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சப்படுத்துகிறது.
சட்டம் என்பது சாமானியர்களுக்கு ஒரு மாதிரியாகவும் ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக வேறு மாதிரியாகவும் இருப்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது.
இந்தத் தீர்ப்பின் மூலம் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் தங்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு மீண்டும் உட்படுத்தி, அதிகாரத்தை பயன்படுத்தி தப்பித்து விடலாம் என்ற எண்ணத்திற்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.
உயர் அதிகாரத்தில் உள்ளவர்களும் சட்டப்படி தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டிய நியாயமும் தர்மமும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
மாநிலத்தின் காவல்துறை, ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வதையும் நடந்து கடமை தவறியதையும் இந்த தீர்ப்பு கடுமையாக கண்டித்து இருக்கிறது.
ஆட்சியாளர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறி சமூகத்தின் கொடுமைகளையும் தீமைகளையும் நீக்க கவனம் செலுத்தாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதையும் இந்த தீர்ப்பு கண்டித்து இருக்கிறது.
திமுக அரசின் ஊழல் மற்றும் அராஜகப் போக்கினைக் கண்டித்து பாஜக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தொடர் நடவடிக்கைகளுக்கு வலு சேர்ப்பதாக இந்த தீர்ப்புகள் அமைந்துள்ளது. தர்மமே வெல்லும் என்ற தத்துவத்தை நிலைநிறுத்திய நீதியரசர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது.