இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இஸ்ரேல் ஹமாஸ் மோதலின் விளைவாக மேற்கு ஆசியாவில் உள்ள சவாலான சூழ்நிலைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது தொடர்பான உத்திகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் வலைதளப்பதிவில், “மேற்கு ஆசியாவில் நிலவும் கடினமான சூழ்நிலை மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் குறித்து ஈரான் அதிபருடன் விவாதித்தாக தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத சம்பவங்கள், வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிர் இழப்பு ஆகியவை அதிகரிப்பதைத் தடுப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவியை உறுதி செய்தல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரையில் மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிசியுடன் பேசியதோடு, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவு உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.