பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்த ரமேஷ் என்பவருக்கு, அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்மன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவரான டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய மலரான தாமரையை ஓரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது ஆகும். எனவே, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் தனது மனு மீது இதுவரை தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கக் கூடாது என எந்த சட்டத்தில் தடை உள்ளது? தாமரை சின்னம் ஒதுக்கியதில், விதிமீறல் ஏதும் உள்ளதா? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், விதிமீறல் என நிரூபிக்காவிட்டால், கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும், வழக்கை தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இனால், மனுதாரர் வழக்கை தொடர்ந்து நடத்தலாமா? அல்லது வாபஸ் பெறலாமா? என்ற சந்தேகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.