தீபாவளி பண்டிகை என்பது இந்துக்களின் பண்டிகையாகும். பண்டைய காலத்திலிருந்தே தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மழைக் காலம் கழிந்து இருளும், ஈரமும் முடிந்த பின்னர் இலையுதிர் காலத்தின் துவக்கத்தின் அடையாளமாகவும், ஒளியின் உற்சவமாகவும் பண்டைய காலத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.
ரிக்வேதத்திலும், யஜுர்வேதத்திலும் ஒளியைப் போற்றுவது பற்றிக் குறிப்புகள் உள்ளன. புத்தரும் கூட, உனக்கு நீயே ஒளியாகு என்று உபதேசம் செய்துள்ளார்.
மேலும், தீபாவளி பற்றி வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம், நாகா நந்தம் எனும் சமஸ்கிருத நாடகம், வாமதேவரின் யசஸ்திலக சம்பூ போன்ற நூல்களிலும் தீபாவளி குறித்து ஏராளமான குறிப்புகள் உள்ளன.
அதுமட்டுமல்ல, தீபாவளியை நரக சதுர்தசி என்று அழைப்பதும் உண்டு. காரணம், நரகாசுரனைப் பகவான் கிருஷ்ணர் வதைத்த தினமாகக் கொண்டாடுவதால், அதர்மத்தைத் தர்மம் வென்ற நாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
நரக சதுர்தசிக்கு மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. எமன் ஆட்சி செய்யும் நகரத்திற்கு நரகம் என்று பெயர். மனிதர்கள் நரகத்திற்குப் போகாமல் இருக்கவும், அகால மரணம் அடையாமல் இருக்கவும், கங்கா ஸ்னானம் தீபாவளி தினத்தில் செய்யப்படுகின்றன என்று பத்மபுராணம் தெரிவிக்கிறது.
இப்படி தீபாவளி பண்டிகை என்பது தொன்று தொட்டு இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும் என இந்து வேதங்கள் மூலம் தெரிய வருகிறது.