சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் என்ஐஏ, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு திடீர் சோதனை நடத்தி, 45 பேரைக் கைது செய்தனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். குறிப்பாக, சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தினர். சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை, படப்பை, அரும்பாக்கம் ஆகிய இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நபர்களின் இல்லங்களில் சோதனை நடத்தினர்.
குறிப்பாக, தங்களது அடையாளத்தை மறைத்து, மக்களோடு வசித்து வரும் நபர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களைத் தேடி இந்த சோதனை நடைபெற்றது.