மறைந்த கருணாநிதி குடும்பத்தைப் போலவே மூன்று தலைமுறையாக தொண்டர்களை அடிமையாக்கி அரசியல் செய்து வருகிறது அமைச்சர் அன்பில் குடும்பம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருவெறும்பூர் தொகுதியில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
எம்பெருமான் ஈசனை, ஜீவராசிகளில் பெரியதான யானை வழிபட்ட திருவானைக்காவும், மிகச் சிறியதான எறும்பு வழிபட்ட திருவெறும்பூரும், திருச்சிக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு. திருவெறும்பூர் கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. தொல்லியல் துறையுடன் தமிழக பாஜக பேசி விரைவில் கும்பாபிஷேகம் நடக்க ஏற்பாடு செய்யும்.
அமைச்சரின் தொகுதியான திருவெறும்பூர் தொகுதி அரியமங்கலம் குப்பை கிடங்கில், ஒரு நாளில் நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்தப் பகுதிகளில், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி தண்ணீர் மாசுபட்டு வருகிறது. குப்பைக் கிடங்கு தீ விபத்து ஏற்படுத்துவது தொடர்… pic.twitter.com/duLuVeuUl6
— K.Annamalai (@annamalai_k) November 8, 2023
1964 நவம்பர் 13 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜரால் ஆரம்பிக்கப்பட்ட BHEL ஆலை, இந்த தொகுதியின் பெருமை. நமது நாட்டின் பெருமைக்குரிய சந்திரயான் 3 விண்கலத்தின் சில உதிரிப் பாகங்கள் இங்கு தயாரிக்கப்பட்டவை.
சமீபத்தில் தேசிய அனல் மின் நிறுவனம், (NTPC) 25000 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. அதில் 50 சதவீத திட்டங்களுக்கு, திருச்சி BHEL நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தப் பகுதியில் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும். கடந்த 40 வருடங்களாக திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் உள்ள பொறியியல் துணை நிறுவனங்கள் (Ancillary units) திருச்சி BHEL மூலமாக பயன்பெற்று வந்தன. ஒரு கட்டத்தில், இந்த துணை நிறுவனங்கள் 4 லட்சம் டன்களுக்கான உற்பத்தி பொருட்களை BHELக்கு வழங்கின.
சுற்றுச்சூழல் கவலைகள் பற்றிய அரசாங்கக் கொள்கைகள் காரணமாக, பெரும்பாலான நாடுகள் நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களைக் குறைத்தன. இதனால் கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்பெற்ற BHEL மற்றும் அதன் துணை நிறுவனங்களின் அனல் கொதிகலன் வர்த்தகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதற்குத் தீர்வு காண, கிட்டத்தட்ட ரூ.50,000 கோடி மதிப்புள்ள கருவிகளை இந்திய நிறுவனங்களிடம் இருந்தே கொள்முதல் செய்ய, பாரதப் பிரதமர் மோடி அரசு முடிவெடுத்தது. இந்தியாவில் திருச்சியும், பெங்களூரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதுகாப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
BHEL நிறுவனம் போல, ISRO, HAL, கொச்சி கப்பல்தளம் உள்ளிட்ட நிறுவனங்கள் திருச்சி துணை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளன. இதில் தமிழக பாஜகவின் தொழில்துறை அணியின் பங்கு மிக முக்கியமானது.
மறைந்த கருணாநிதி குடும்பத்தைப் போலவே மூன்று தலைமுறையாக தொண்டர்களை அடிமையாக்கி அரசியல் செய்து வருகிறது அமைச்சர் அன்பில் குடும்பம். இந்த அன்பில் குடும்பத்தை பற்றி நீதிபதி சர்க்காரியா ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள விவசாய நிலங்களுக்குத் தனியார் நிறுவனங்களின் வாயிலாகப் பூச்சி மருந்து அடிக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. ஏக்கருக்கு இத்தனை சதவிகிதம் என கமிஷன் பேசப்பட்டு, இறுதியில் கமிஷன் வழங்கிய நிறுவனத்துக்கே திட்டம் உறுதி செய்யப்பட்டது . இந்தப் பூச்சி மருந்து ஊழல் குறித்தும் விரிவாக தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்தார் நீதிபதி சர்க்காரியா. ஊழலை செட் செய்தது தான் இந்த அன்பில் குடும்பம்.
அமைச்சரின் தொகுதியான திருவெறும்பூர் தொகுதி அரியமங்கலம் குப்பை கிடங்கில், ஒரு நாளில் நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்தப் பகுதிகளில், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி தண்ணீர் மாசுபட்டு வருகிறது. குப்பைக் கிடங்கு தீ விபத்து ஏற்படுத்துவது தொடர் கதையாகி விட்டது.
இந்த வருடம் மட்டும் இரண்டு முறை, ஏப்ரல் மாதத்திலும் ஜூலை மாசத்திலும் இங்கு தீ விபத்து ஏற்பட்டது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.