சில வாரங்களுக்கு முன், சூதாட்ட செயலி வழக்குடன் தொடர்புடைய பணமோசடி விசாரணை தொடர்பாக, பாலிவுட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
கடந்த சில நாட்களுக்கு முன், மகாதேவ் செயலி உட்பட 22 சட்டவிரோத சூதாட்ட செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. மகாதேவ் சூதாட்ட செயலியானது பல்வேறு வகையான விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாட உதவுகிறது.
இந்த செயலியின் விளம்பரதாரர்கள் இரவி உப்பல் மற்றும் சவுரப் சந்திரகர். இவர்கள் துபாயில் உள்ளனர். இந்த செயலியின் விளம்பரதாரர்கள், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்குச் சுமார் 508 கோடி செலுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது, சத்தீஸ்கரில் தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்த வழக்கு முதல்வர் பூபேஷ் பாகேலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சிக்கும் – பூபேஷ் பாகேலுக்கும் இடையே அரசியல் வார்த்தைப் போர் உருவாகி உள்ளது.
மஹாதேவ் சூதாட்ட செயலியானது கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற பல்வேறு வகையான விளையாட்டுகளில் பந்தயம் கட்ட உதவுகிறது.
இந்த செயலியில் உள்ளவர்கள், தங்களுக்குள் குழுக்களை அமைத்து செயல்படுகின்றன. இதன் மூலம் ஒரு நாளைக்கி சுமார் 24 மில்லியன் வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சூதாட்ட செயலியானது, அதிகப் பணம் சம்பாதிக்கலாம் போன்ற மக்களைக் கவர்ந்திழுக்கும் கருத்துக்களைக் கூறி சமூக வலைத்தளங்களில் தொலைப்பேசி எண்களைப் பதிவிடுகின்றன. இந்த எண்களைத் தொடர்பு கொண்டவுடன், மக்களுக்கு இரண்டு தனித்தனி தொடர்பு எண்கள் வழங்கப்படும். ஒரு எண், பணத்தைச் செலுத்துவதற்கும், பயனர் ஐடிகளில் புள்ளிகளைப் பெறுவதற்கும் ஆகும். மற்றொரு எண் கொடுக்கப்பட்ட புள்ளிகளைப் பணமாக்குவதற்குத் தொடர்பு கொள்ள உதவுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இரன்பீர் கபூர் முதல் கபில் சர்மா வரை பல பாலிவுட் பிரமுகர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.