தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கடத்திவரப்பட்ட 31 அரிய வகை விலங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அதில், வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த குருசாமி சுதாகர் என்ற பயணி, மீது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை தடுத்தி நிறுத்தி, உடைமைகளைப் சோதனையிட்டனர். அதில் அரிய வகை மலைப்பாம்பு, குரங்குகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, சென்னை குற்றப் புலனாய்வு மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, அரிய வகை வெளிநாட்டு விலங்குகளை ஆய்வு செய்தனர். அதில், 2 வெளிநாட்டு மலைப்பாம்பு குட்டிகள், 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்கு குட்டிகள், 26 அரிய வகை ஆப்பிரிக்கக் கண்டத்து எலிகள் என 31 விலங்குகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில், 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்குகளும், 15 ஆப்பிரிக்கக் கண்டத்து அரிய வகை எலிகளும் இறந்து கிடந்தன. இறந்த விலங்குகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
இதனை அடுத்து, உயிருடன் இருந்த 2 மலைப்பாம்புகள் குட்டிகள் உட்பட 13 அரிய வகை உயிரினங்களைத் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, சென்னையிலிருந்து, பாங்காக் சென்ற தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 2 மலைப்பாம்பு குட்டிகள் உட்பட 13 அரிய வகை உயிரினங்களைத் தாய்லாந்து நாட்டுக்கு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
தொடர்ந்து, அரிய வகை விலங்குகளைக் கடத்தி வந்த குருசாமி சுதாகரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.