பேரியம் நைட்ரேட் மற்றும் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை நாடு முழுவதும் வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளைத் தடை விதிக்கக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாசுபடுத்தும் பட்டாசுகள் தொடர்பாக இந்த நீதிமன்றம் ஏற்கனவே, பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தனர். காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்கவும், தவிர்க்கவும் நடவடிக்கைகள் தொடர்பாக கூறினர். இந்த உத்தரவு இராஜஸ்தான் உட்பட நாட்டின் அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு தனது உத்தரவில் கூறினர்.
இராஜஸ்தான் மாநிலம் இதைக் கவனத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் மட்டுமல்ல, அதன்பிறகும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நவம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், நாட்டில் எந்த வகையான பட்டாசுகளுக்கு அனுமதி உள்ளது. பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.
உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் பசுமைப் பட்டாசுகள் தவிர, அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்தது. பட்டாசுகளில் பேரியம் உப்புகளைப் பயன்படுத்துவதற்கும், நீண்ட வரிசையில் இணைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
இதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. நீண்ட வரிசையில் உள்ள பட்டாசுகள் மற்றும் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளைத் தயாரிப்பதற்கு அனுமதி கோரிய பட்டாசு உரிமையாளர்களின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பதற்காகவும், வெடிப்பதற்காகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும், காற்று மாசுபாடு குறைவாக உள்ள நகரங்களில் மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.