கத்தாரில் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், கத்தாரில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.
இந்திய கடற்படையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள, ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்டு கன்சல்டன்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உட்பட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. அந்நிறுவனத்தின் பல்வேறு முக்கிய திட்டங்களில் இவர்கள் பங்கு பெற்றனர்.
இந்நிலையில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேர், இஸ்ரேலுக்கு ஆதரவாக கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இவர்கள் எட்டு பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஜாமின் மனு பல்வேறு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்தியர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, கத்தார் நீதிமன்றத்தில் இந்தியா அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், எட்டு பேரின் குடும்பத்துடன் தொடந்து பேசிவருகிறோம். அவர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியது அனைவருக்கும் தெரியும். அனைத்து வகையிலான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படும். தீர்ப்பு குறித்த விவரங்கள் சட்ட நிபுணர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த செவ்வாய் அன்று, எட்டு பேருக்கும் தூதரக ரீதியிலான உதவி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.