திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 6 -ம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2001-2006-ம் ஆண்டு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன்.
இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக 2020-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய்க்கு, அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தது. அத்துடன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதற்கு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை வரும் டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.