தூத்துக்குடி மாவட்டம் செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பெருங்குளம் கிராமத்தில் உள்ள செங்கோல் ஆதீன மடத்தின் 103வது மடாதிபதியான திருக்கைலாய பரம்பரை சிவபிரகாச தேசிக சத்தியஞான பண்டார சன்னதி சுவாமி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் செங்கோல் ஆதீன மடத்தின், 101வது மடாதிபதி நிர்வாகத்தின் போது, முறையான அனுமதியின்றி மடத்தின் சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து 1960ஆம் ஆண்டு நிரவாகத்தின் உள்ளே நுழைந்த அறநிலையத்துறை மடத்தை நிரவகிக்க மடாதிபதிக்கு ஆலோசனை வழங்க குழுவை நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
102வது மடாதிபாதி காலமான நிலையில் 103வது மடாதிபதியாக தாம் பொறுப்பேற்றதாகவும், எனவே மடத்தை நிர்வகிக்க அனுமதிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மடத்துக்கு மேலாளரை நியமிக்க வகை செய்த சட்டப்பிரிவை, உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது; அதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
மடத்தின் நடவடிக்கைகளை மடாதிபதியிடம் ஒப்படைக்க மறுத்து, ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு அதிகார வரம்பு இல்லை. கணக்கு, ஆவணங்களை பராமரிக்கும்படி, நிர்வாக அதிகாரிக்கு ஆணையர் உத்தரவு பிறப்பித்ததற்கும் அதிகார வரம்பு இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.
காலவரையறையின்றி நிர்வாக அதிகாரியை நியமிக்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, நிர்வாக அதிகாரி நீடிப்பதில் நியாயம் இல்லை.. செங்கோல் ஆதீனத்தின் பொறுப்பை, 12 வாரங்களுக்குள் மடாதிபதியிடம் ஒப்படைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.