டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் (AQI) இன்று 373ஆக பதிவானது. கடந்த ஆண்டு தீபாவளியன்று காற்றின் தரம் 312 ஆக இருந்தது. 2020 இல் 414 ஆகவும், 2019 இல் 337 ஆகவும், 2018 இல் 281 ஆகவும், 2017 இல் 319 ஆகவும், 2016 இல் 431 ஆகவும் காற்றின் தரம் இருந்தது.
காற்றின் தர கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்ற சுவிஸ் நிறுவனமான IQAir புள்ளிவிவரப்படி, உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக திங்கள்கிழமை டெல்லி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி ஆகிய நகரங்கள் உள்ளன. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் மும்பையும் கொல்கத்தாவும் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. ஹரியானா, பஞ்சாபின் பல பகுதிகள் காற்றின் தரக் குறியீடுகளை மோசம் முதல் ‘மிகவும் மோசமான பிரிவில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு உச்சகட்டத்திற்கு சென்றதற்கு ஆம் ஆத்மி கட்சியே காரணம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பாஜகவை சேர்ந்த ஷேஜாத் பூனவல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.
பஞ்சாபில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதே டெல்லியில் காற்று மாசு ஏற்பட காரணம் என கடந்த 2018ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். ஆனால் ஆம் ஆத்மி ஆட்சியில் உளள் பஞ்சாப்பில் கடந்த இரு நாட்களில் 2600 விவசாய கழிவு எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதனை தடுக்க ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.