நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் சிறந்த பீல்டருக்கான விருதுக்கு 3 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது.
இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகையை சூடியது. இதன் மூலம் தான் விளையாடிய 9 போட்டிகளில் 9 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசைக்க முடியாத ஒரு அணியாக திகழ்கிறது.
மேலும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பீல்டிங் பயிற்சியாளர் திலீப் தங்கப்பதக்கம் வழங்கி வருகிறார்.
அதன்படி நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் சிறந்த பீல்டருக்கான விருதுக்கு 3 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அதில் ஜடேஜா, கேஎல் ராகுல், சூர்யகுமார் ஆகியோர் இருந்தனர்.
இந்த விருதை மைதான ஊழியர்கள் மூலம் அறிவித்தார் பீல்டிங் பயிற்சியாளர். அவர்கள் சூர்யா என்ற பெயர் பலகையை வைத்து வித்தியாசமாக வெற்றியாளரை தெரிவித்தனர். இந்த விருதைப் பெற்ற சூர்யகுமார் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.