செல்போன்கள் மேட் இன் சீனா என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முட்டாள்களின் அரசன் என்று கடுமையாக விமர்சித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் சாதனைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மனநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றும் கடுமையாக விளாசி இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வரும் 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ம.பி.யைப் பொறுத்தவரை ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இம்மாநிலத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், நேற்று பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, செல்போன்களின் பின்புறம் மேட் இன் சீனா என்று இருப்பதாகவும், இதை மேட் இன் மத்தியப் பிரதேசம் என்று மாற்ற காங்கிரஸ் கட்சி நினைப்பதாகவும், ஆகவே, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும்படியும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ம.பி. மாநிலம் பேதுல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மத்தியப் பிரதேச மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.க. மீது நம்பிக்கையும், பாசமும் வைத்திருக்கிறார்கள். மோடியின் வாக்குறுதிகளுக்கு முன்பு தனது பொய் வாக்குறுதிகள் எடுபடாது என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டு விட்டது.
ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, இராமர் கோவில் கட்டுவது ஆகியவற்றை செய்ய முடியாது என்று காங்கிரஸ் நினைத்தது. ஆனால், பா.ஜ.க. செய்து காட்டியது. இதனால், மக்களைச் சந்திக்க திராணி இல்லாமல் சில காங்கிரஸ் தலைவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். மக்களிடம் என்ன பேசுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
பழங்குடியினர் நலனுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. காங்கிரஸின் உள்ளங்கைக்கு திருடவும், கொள்ளையடிக்கவும் மட்டுமே தெரியும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அழிவைக் கொண்டு வரும் என்பது மக்களுக்கு தெரியும்.
இந்தியாவில் உள்ள அனைவரிடமும் ‘மேட் இன் சைனா’ செல்போன் இருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறியதாக கேள்விப்பட்டேன். முர்கோன் கே சர்தார் (முட்டாள்களின் அரசன்), இந்த மக்கள் இந்த உலகில் எங்கு வாழ்கிறார்கள்? காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் சாதனைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மனநோயை உருவாக்கி இருக்கிறார்கள்.
அவர்கள் அணியும் வெளிநாட்டுக் கண்ணாடிகள் எனக்குத் தெரியாது. இதனால் அவர்கள் நாட்டின் வளர்ச்சியைப் பார்க்க முடியாது. உண்மை என்னவென்றால், இன்று இந்தியா உலகின் 2-வது பெரிய செல்போன் உற்பத்தியாளராக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20,000 கோடி ரூபாக்கும் குறைவான மதிப்புள்ள மொபைல்கள் தயாரிக்கப்பட்டன. இன்று 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும், இந்தியா மற்ற நாடுகளுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றுமதி செய்கிறது. தேர்தல் காலத்திற்கு முன்புதான் ‘மேக் இன் இந்தியா’ என்பதை நினைவில் கொள்பவர்களுக்கு சுதேசியின் முக்கியத்துவம் புரியவில்லை. மக்கள் இப்போது உள்ளூர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். தீபாவளியின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை 4.4 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்” என்றார்.
உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான Counterpoint-ன் அறிக்கையின்படி , இந்தியா இப்போது உலகின் 2-வது பெரிய செல்போன் உற்பத்தியாளராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.