இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா 13-ம் தேதி தொடங்கி, 19- ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா மிக உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
கந்த சஷ்டி விழாவையொட்டி, தென் மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், திருக்கோவிலில் தரிசனம் உள்ளிட்ட கட்டணங்களை திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தாறுமாறாக உயர்த்தியுள்ளதாகப் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதாவது, கந்த சஷ்டி விழாவுக்கு முன்னர், குறிப்பாக, சாதாரண நாட்களில் அபிஷேக கட்டணம் ரூ.500 வசூல் செய்யப்பட்டது. தற்போது, விழா நாட்கள் என கூறி சிறப்பு கட்டணம் என்ற பெயரில் ரூ.3,000- வரை வசூல் செய்யப்படுகிறது.
அதே போல, சாதாரண நாட்களில் விஸ்வரூப தரிசனத்திற்கு ரூ.100-ம் மட்டுமே வசூல் செய்யப்பட்டது. தற்போது, விழாக்காலம் எனக் கூறி சிறப்பு கட்டணம் என்ற பெயரில் ரூ.2,000 -வரை வசூல் செய்யப்படுகிறது.
ஆக மொத்தம், கந்த சஷ்டி விழா நடைபெறும் 7 நாட்களிலும் தரிசன கட்டணம் உயர்த்தி வசூல் செய்யப்படுவதற்குப் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏழை, எளிய மக்கள் மற்றும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மீது தாக்கப்படும் தாக்குதல் இது என திமுக அரசுக்கு எதிராகப் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.