பா.ஜ.க. என்னும் புயல் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறியும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சியினரும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அதேசமயம், இங்கு நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பாரதப் பிரதமர் மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரு இடங்களில் பிரச்சாரம் செய்தார். அதன்படி, ஷாஜாபூரில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த சில நாட்களாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து ஆசி பெற்றேன். பா.ஜ.க. மீது காட்டும் அன்பும் நம்பிக்கையும் வியக்க வைக்கிறது. டெல்லியில் அமர்ந்து தேர்தல் கணக்கீடு செய்பவர்களால் மதிப்பீடு செய்ய முடியவில்லை.
மக்களின் அபார ஆதரவால், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. புயல் காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறியும். எங்கள் மீதான உங்கள் அன்பு பலரின் தூக்கத்தை கெடுக்கிறது. சிலரது முகத்தில் புன்னகை மறைந்து விட்டது. அவர்கள் மிகவும் சோகமாகத் தெரிகிறார்கள். அவர்களின் தொலைக்காட்சிப் பேட்டிகளைப் பாருங்கள், அவர்களின் வார்த்தைகளைக் கேளுங்கள். காங்கிரஸை நீங்கள் என்ன செய்தீர்கள்.
காங்கிரஸின் சுரண்டல்களை நாட்டில் யாரும் மறக்க முடியாது. காங்கிரஸ் எங்கு வந்தாலும், அது பேரழிவை ஏற்படுத்தியது. மிகவும் சிரமப்பட்டு மத்தியப் பிரதேசத்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து பா.ஜ.க. மீட்டிருக்கிறது. காங்கிரஸுக்கு ஒரே ஒரு செயல்திட்டம்தான். அது கொள்ளை, ஊழல், பொதுமக்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் பொய்கள் ஆகியவைதான். இது அவர்களின் தந்திரம்.
காங்கிரஸிடம் உங்களுக்கு விரோதம், விரக்தி மற்றும் எதிர்மறை உணர்வுகள் மட்டுமே உள்ளன. இயல்பிலேயே காங்கிரஸானது சமாதானம், போக்கிரித்தனம், கலவரம் மற்றும் ஊழலை ஊக்குவிக்கிறது. காங்கிரஸுக்கு வலிமையோ நோக்கமோ இல்லை. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள், நாங்கள் விரைவில் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இருப்போம் என்று நம்புகிறார்கள்.
நான் 3-வது முறையாக பிரதமர் பதவியில் அமரும்போது நமது பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு கொண்டு வருவேன் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறேன். இந்தியா வேகமாக முன்னேறி வரும் நாடு. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதன் மூலம் இந்தியா உலகின் ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாறப் போகிறது. பல நூற்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஆற்றலும் வலிமையும் இப்போது சரியான பாதையில் முன்னேறி வருகிறது.
இந்த முக்கியமான தருணத்தில் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைவது அவசியம். முதலீட்டாளர்களை விரட்டியடிக்கும் கட்சி காங்கிரஸ். ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்யும் கட்சி. ஆனால், பா.ஜ.க. உழைக்கும் கட்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.