பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், விளக்கம் அளிக்கும்படி ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தலைமையிலான பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. இதேபோல, பிரதமரை அவதூறாகப் பேசிய விவகாரத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.