மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்திக்க முடியாததற்கு எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரெமன்ட் நகரில் உள்ள டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலைக்குச் சென்று பார்வையிட்டார். மேலும், டெஸ்லா குழுமத்தின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இதுகுறித்து பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லாவின் உற்பத்தி நிலையத்தைப் பார்வையிட்டேன். திறமையான இந்தியப் பொறியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் மூத்த பதவிகளில் பணிபுரிவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் டெஸ்லாவின் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் குறிப்பிடத்தக்கப் பயணத்தில் இந்தியர்கள் பங்களிக்கின்றனர்.
டெஸ்லா மின்சார வாகன விநியோக சங்கிலியில் இந்தியாவிலிருந்து ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் சப்ளையர்களின் முக்கியத்துவத்தைப் பார்த்துப் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து அதன் உதிரிப்பாகங்கள் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் பயணத்தில் டெஸ்லா உள்ளது. மேலும் இந்தத் தருணத்தில் எலான் மஸ்க் உடனான சந்திப்பைத் தவறவிட்டுவிட்டேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, டெஸ்லாவுக்கு நீங்கள் வருகை தந்தது கௌரவம் அளிக்கிறது. கலிபோர்னியாவுக்கு என்னால் வர முடியாததற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், வருங்காலத்தில் உங்களைச் சந்திக்கும் ஒரு நாளை எதிர்பார்த்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.