தொடர் மழை காரணமாக, டெல்டா பகுதியில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை உடனே ஆய்வு செய்து ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லேசானது முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகரித்துள்ளது. பலத்த மழையின் காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்துக் கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் என்றும்,
டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் சம்பா பருவ பயிர்களுக்கு விவசாயப் பணிக்குக் காவிரியில் போதிய நீர் கிடைக்காததால், பெருமளவில் சம்பா சாகுபடி என்பது நடைபெறாமல் உள்ளது என்றும்,
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை, வேளாண்துறை மூலம் உடனே கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தூர்வாரப்படாமல் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால்களைப் போர்க்கால
அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கையை திமுக அரசு செவி சாய்க்கவில்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், இந்த கோரிக்கையாவது உடனே நிறைவேற்ற முன்வரவேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது.