சத்தீஸ்கரில் தாமரை மலரும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில், 20 தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடந்தது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான 2-ம் கட்டத் தேர்தல் வரும் 17-ம் தேதி நடக்கிறது.
இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜாஞ்ச்கிர்- சம்பா மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இந்த முதல்கட்டத் தேர்தலிலேயே பூபேஷ் பாகல் அரசு தோல்வி அடைந்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது 2-ம் கட்டத் தேர்தலிலும் தொடரும். ஆகவே, சத்தீஸ்கரில் தாமரை மலரும் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமித்ஷா, “மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வளர்ச்சித் திட்டங்களை தந்திருக்கிறது. இது, நகர்ப்புற மற்றும் இளம் வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் நிச்சயம் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.
1995-ம் ஆண்டு முதல் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த முறை இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம். சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. எனினும், சில மாதங்களிலேயே அங்குள்ள மக்கள் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும். கடந்த முறை இதே காலகட்டத்தில் 5 மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கண்ட மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வென்றோம்.
நீங்கள் 2024 வரை காத்திருங்கள். முன்பைவிட கூடுதலான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார். மத்திய அரசின் திட்டங்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 60 முதல் 70 சதவீத வாக்காளர்களின் வாழ்வில் மாற்றம் தெரிகிறது. ஜி20, சந்திரயான் நிலவை அடைந்தது போன்றவை மக்களின் வாழ்விலும் மனதிலும் பா.ஜ.க. மீதான மதிப்பை அதிகரித்திருக்கிறது..
சமீபத்தில் மோடி அரசு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்தது. மோடி அரசின் நல்லாட்சியால் ஒவ்வொரு பிரிவினரும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நாங்கள் வாக்குக் கேட்கிறோம். தேர்தலை மனதில் வைத்து நாங்கள் முடிவுகளை எடுப்பதில்லை. அது அரசின் கடமை” என்றார்.