ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலுள்ள தாகூர் ஹாலில் ‘சாவ் பர்வா’ திருவிழாவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். இது மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் பாரம்பரிய நிகழ்ச்சியாகும்.
புதுடெல்லியைச் சேர்ந்த சங்கீத நாடக அகாடமி மற்றும் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாவ் கேந்திரா, சந்தங்கியாரி, பொகாரோ ஆகியவை இணைந்து, இந்த சாவ் நடனங்கள் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் குறித்த ‘சாவ் பர்வா’ திருவிழா, பயிற்சிப் பட்டறை மற்றும் கருத்தரங்கம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியை ஜம்மு காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்துப் பேசுகையில், “பண்டைய காலங்களில் சாவ் பர்வா ஒரு போர் நடனமாகவும், ஆன்மாவை மேம்படுத்தும் கலை வடிவமாகவும் கருதப்பட்டது. இந்து பாரம்பரியத்தின் அழகியல் முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதையும், ஆன்மாவை வலுப்படுத்துவதையும் சாவ் பர்வா நடனம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
சாவ் பர்வா நடனத்துக்கு வரலாற்றில் தகுதியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனினும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சங்கீத நாடக அகாடமி மற்றும் ஜம்மு காஷ்மீர் அகாடமியை நான் வாழ்த்த விரும்புகிறேன். அதோடு, ஜம்மு காஷ்மீர் கலைஞர்களுக்கும் இது ஒரு அற்புதமான கலாச்சார பரிமாற்றமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து, பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்திய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு பழங்குடியின மக்களின் மகத்தான பங்களிப்பு குறித்து பேசினார். மேலும், ஜம்மு காஷ்மீரின் செழுமையான அருவ பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை புத்துயிர் பெறச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளையும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில், சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா மற்றும் ஜம்மு காஷ்மீர் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகள் அகாடமியின் செயலாளர் பாரத் சிங் மன்ஹாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தவிர, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் 200 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த சாவ் பர்வா பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெறுகிறது. இது மாநிலங்களுக்கு இடையேயான கலை பரிமாற்ற அனுபவத்தை வழங்குகிறது. மேலும், காஷ்மீரி கலைஞர்கள் பிற மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாய்ப்புகளையும் அனுபவத்தையும் உருவாக்குகிறது.