வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஜெயங்கொண்டம் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
1000 வருடங்கள் பழமையான கங்கைகொண்ட சோழீச்சுரம் கோயில் அமைந்திருக்கும் பகுதி இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திர சோழரால் அமைக்கப்பட்ட, 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 824 ஏக்கர் பரப்பளவு மற்றும் 18 அடி ஆழம் கொண்ட சோழகங்கம் என்ற பொன்னேரி அமைந்துள்ள பகுதி.
ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் ராசு ஆகிய இருவரும் நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து லடாக் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டது பெருமைக்குரியது.
1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் ஜெயங்கொண்டம் நிலக்கரி சுரங்கம் இணைந்து ஒரு 1600 MW அனல்மின் நிலையத்தை உருவாக்க திட்டம் தீட்டினார்கள்.
1997 ஆம் ஆண்டு, இந்தத் திட்டத்திற்காக, ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார 13 கிராமங்களில் இருந்து 8373 ஏக்கர் நிலத்தை தமிழக அரசின் TIDCO நிறுவனம் கையகப்படுத்தியது. அவர்களுக்கான இழப்பீடு கடந்த 25 ஆண்டுகளாகக் கொடுக்கவில்லை.
நிலப் பட்டாக்களை பெற்றுக்கொண்டு, இழப்பீடும் கொடுக்காமல் 25 ஆண்டுகள் விவசாயப் பெருமக்களைக் காத்திருக்க செய்து விட்டு, தற்போது மீண்டும் பட்டாவை திருப்பிக் கொடுத்த திமுக அரசுக்கு, எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது.
நிலம் கொடுத்த சில விவசாயிகள், 25 வருடங்கள் காத்திருக்க வைத்தமைக்கு இழப்பீடு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு திமுக அரசு எப்போது தீர்வு வழங்கும்?
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று அரியலூருக்கு வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில், 26,571 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,59,129 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,44,699 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 61,042 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 89,965 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,11,694 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 1512 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பல லட்சம் மக்கள் பயனடையும்படி நலத்திட்டங்கள் செயல்படுத்தியுள்ளது.
ஆனால் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, ஜெயங்கொண்டம் முந்திரி ஆராய்ச்சி நிலையம், உடையார்பாளையத்தில் முந்திரிப்பருப்பு தொழிற்சாலை, ஜெயங்கொண்டத்தில் காகிதத் தொழிற்சாலை, ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்துக்கிராமங்களுக்கும் குடிநீர் வசதி என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், 510 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.