அமெரிக்க நடிகையும், மனித உரிமை ஆர்வலருமான ஏஞ்சலினா ஜோலி, பாகிஸ்தானில் இருந்து பெருமளவில் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றப்பட்டதற்கு கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கரவாதிகள் அகதிகள் போர்வையில் பாகிஸ்தானில் தங்கி இருந்து இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் பாகிஸ்தானில் தங்கியிருந்த ஏராளமான ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றி வருகிறது.
இதற்கு அமெரிக்கா நடிகையும், மனித உரிமை ஆர்வலருமான ஏஞ்சலினா ஜோலி, பாகிஸ்தானில் இருந்து பெருமளவில் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றப்பட்டதற்கு கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஞ்சலினா ஜோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு அளித்துவந்தது. இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் இருக்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அவர்களை வெளியேற்றுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
இன்றைய ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், கல்வி வாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி ஆப்கானிஸ்தானில் வாழ முடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், ” உலகளவில் மனித உரிமை பின்னடைவுக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல போர்கள், மோதல்கள் மற்றும் இடம்பெயர்வுகளை தவிர வேறு எதையும் அனுபவிக்காத ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இது ஒரு புதிய சோகம் ” என்று அவர் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.