கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்திருக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சர்வதேச மாநாட்டு அரங்கில் “யெகோவாவின் சாட்சிகள்” என்கிற கிறிஸ்தவ மத பிரிவினரின் மாநாடு கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளான 29-ம் தேதி காலை சுமார் 2,000 பேர் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பிரார்த்தனைக் கூட்டத்தில் 3 இடங்களில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இச்சம்பவம் கேரளா மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. எனவே, இச்சம்பவத்தில் தீவிரவாதத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த மத்திய அரசு, உடனடியாக என்.ஐ.ஏ. மற்றும் என்.எஸ்.ஜி. அதிகாரிகளை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கியது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அதே சபையின் உறுப்பினரான டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீஸில் சரணடைந்தார். அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் குண்டு வைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
எனினும், மார்டினை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த 15-ம் தேதி அவரது காவல் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ம் தேதிவரை சிறைக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருந்தது. இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மலையாற்றூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் மகன் பிரவீனும் ஒருவர். இவர்தான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர். இதன் மூலம் களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது.
பிரவீனின் தாய் லிபினா மற்றும் சகோதரி ரீனா ஆகியோரும் குண்டு வெடிப்பில் பலியானது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.