உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழாவில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என்று கூறியிருக்கிறார்.
உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழா இன்று நடந்தது. இம்மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புவியியல் ரீதியாக உலகளாவிய தெற்கு எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், கூட்டு முயற்சியின் காரணமாக, அது முதல் முறையாக தற்போது குரல் கொடுக்கிறது.
நாங்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகள். ஆனால், எங்கள் முன்னுரிமைகள் ஒரே மாதிரியானவை. கடந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டின்போது, மக்களுக்காக மக்களால் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே எங்கள் முயற்சியாக இருந்தது. நாங்கள் ஜனவரியில் முதல் முறையாக உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தோம்.
இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 200-க்கும் மேற்பட்ட ஜி20 கூட்டங்களில், உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதன் விளைவாக, டெல்லி பிரகடனத்தில் உலகளாவிய தெற்கின் தலைப்புகள் சேர்க்கப்பட்டு அனைவரின் ஒப்புதலைப் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம். மேலும், இந்தியாவின் முயற்சியால் ஜி20-ல் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரான அந்த வரலாற்று தருணத்தை என்னால் மறக்க முடியாது.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் நாங்களும் நிதானத்தைக் கடைப்பிடித்தோம். நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் உயிரிழந்ததையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேசமயம், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேசிய பிறகு, பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி இருக்கிறோம். உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.
புதிய தொழில்நுட்பம் உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு இடையே இடைவெளியை அதிகரிக்கக் கூடாது என்று இந்தியா நம்புகிறது. ஆகவே, செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த மாதம் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை உச்சி மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யும்” என்று கூறினார்.