மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று நடந்த வாக்குப்பதிவின்போது 2 வாக்குச்சாவடிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வாக்காளர் ஒருவர் காயமடைந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி செய்திருக்கிறது. இந்த சூழலில், இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, இம்மாநிலத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தில் 64,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், பாலகாட் மாவட்டத்தின் பைஹார், லாஞ்சி, பர்ஸ்வாரா தொகுதிகள் மற்றும் மண்ட்லா, திண்டோரி மாவட்டங்களில் உள்ள சில சாவடிகளில் மாலை 3 மணி வரை மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த சூழலில், மொரேனா மாவட்டம் திமானி தொகுதியின் 147 மற்றும் 148 ஆகிய 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கல் வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார். எனினும், பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. அதோடு, சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் 55.31 சதவீத வாக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகி இருக்கின்றன.