கேரளாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்த இரு நக்சலைட்டுகள் என சந்தேகிக்கப்படும் இருவர் தமிழகத்திற்குள் வந்திருக்கலாம் என்பதால் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணூர் மாவட்டத்தில் அதிரடி படையினருடன் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டுகள் என சந்தேகிக்கப்படும் இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து கோவை மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 14 எல்லை சோதனைச் சாவடிகளில் சுமார் 160 போலீசார் சோதனைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள், கார்கள் மற்றும் பிற வாகனங்களை முழுமையாகச் சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் தெரிவித்தார்.
புல்லட் காய சிகிச்சைக்காக மருந்துகளை வாங்கும் சந்தேக நபர்களின் விவரங்களை அளிக்குமாறு மருத்துக்கடை உரிமையாளர்களிடம் கேட்டுள்ளோம் என்றும், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதே போல் தமிழக – கர்நாடக மாநில எல்லை சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.