ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக்கிவிட்டார்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இம்மாநிலத்துக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் பகீரத முயற்சி மேற்கொண்டிருக்கின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “நாட்டிலேயே ஊழலில் அசோக் கெலாட்டின் அரசு தான் நம்பர் ஒன். இப்படி ஒரு ஊழல் அரசை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இங்கு இரட்டை இன்ஜின் ஆட்சியை அமைந்ததும், இந்த ஊழலை எல்லாம் விசாரிப்போம். ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தலைகீழாக தூக்கிலிடப்படுவார்கள்.
ஒரு பக்கம், நாட்டை பாதுகாப்பாக மாற்றிய பிரதமர் மோடியின் அரசும், மறுபுறம் ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தியை 20 முறை பிரதமராக்க முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. இம்மாநிலத்தில் இரட்டை இன்ஜின் அரசை உருவாக்குங்கள். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 450 ரூபாய்க்கு வழங்கப்படும்.
ஏழைகளுக்காக 16 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறோம். காளி-சிந்து அணையின் பெயரில் 250 கோடி ரூபாய் ஊழல் செய்த கெலாட் அரசு, ரேஷனிலும் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது.
ஏழைகளின் உணவில் கூட ஊழல் செய்பவரால் ராஜஸ்தானுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ராஜஸ்தான் முழுவதையும் காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக்கிவிட்டார்கள். எனவே, அத்தகைய அரசை வேரோடு தூக்கி எறிய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்திருக்கிறீர்கள்.
இந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் பெரிய அளவில் ஏதாவது செய்திருந்தால் அது ஊழல் மட்டும்தான். ஆகவே, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ஓட்டு போடும்போது, எம்.எல்.ஏ. அல்லது பா.ஜ.க.வை தேர்வு செய்ய ஓட்டுப் போடுகிறோம் என்று நினைக்க வேண்டாம். ராஜஸ்தான் மாநிலமும் நாடும் செழிக்க ஓட்டுப் போடுகிறோம் என்று நினையுங்கள்” என்று பேசினார்.